திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த வைரவனகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன். இவரது மனைவி சகுந்தலா. இவர்களது மகன் ஜெகன். மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இவரது இளைய மகள் 2011ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
15 லட்சம் கட்ட வேண்டும்
இதனால் ஊர் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி கட்டப்பஞ்சாயத்து செய்த சிவா, ரமேஷ், சிலோன்மணி உள்ளிட்டோர் சகுந்தலா குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கிவைத்துள்ளனர்.
ஊர் கட்டுப்பாட்டை மீறியதால் 15 லட்சம் கட்ட வேண்டும் என்றும் கட்டப்பஞ்சாயத்தார் தெரிவித்துள்ளனர்.
ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் கடந்த 10 ஆண்டுகளாக, கிராமத்தில் சொந்தமாக வீடு இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாமல் பழவேற்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வாழ்ந்துவந்துள்ளனர்.
தாக்கிய கட்டப்பஞ்சாயத்தார்
இந்நிலையி்ல் தனது பேத்திக்கு சடங்கு செய்வதற்காக ஊருக்குள் வந்தவர்களை சிவா, ரமேஷ், சிலோன்மணி ஆகியோர் ‘15 லட்சம் கொடுத்தால்தான் ஊருக்குள் வர வேண்டும்’ என்று தெரிவித்தும், ‘மீறி வருகிறாயா’ எனக் கேட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார்
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தர்மன் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு, இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.
இதனையறிந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல் ஜூன் 16ஆம் தேதி, மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் படகைச் சரிசெய்து கொண்டிருந்த தர்மனை, 'முதலமைச்சருக்கு புகார் அனுப்புகிறாயா' எனக் கேட்டு மீண்டும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தர்மனின் மனைவி சகுந்தலா, அவரது மகன் ஜெகன் ஆகியோர் நேற்று (ஜூன் 17) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனுவை அளித்தனர்.
அதில், "ஊருக்குள் வருவதற்கு 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களை வாழ வைக்க வேண்டும். இல்லையேல் கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்ததால் இங்கிருந்து செல்வதாகவும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்து-கொள்ளப்போவதாகவும் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.