திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள முதல் சபையான ரத்தின சபை திருவாலங்காடு ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும். இதையடுத்து நேற்று இரவு 9 மணி அளவில் ரத்தினசபாபதி பெருமாள் ஸ்தல விருட்சத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா அபிஷேகம் தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது. இதில் விபூதி, சந்தனம், கதம்ப தூள், நெல்லிப்பொடி, வில்வப் பொடி, சாத்துக்கொடி, வாழைப்பழம், கமலா பழம், திராட்சை பழம், பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலசாபிஷேகம், புஷ்பாஞ்சலி என மொத்தம் 33 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின் சர்வ அலங்காரம் செய்ய பெற்று அதிகாலை 5 மணிக்கு தீபாராதனை நடந்தது. இன்று காலை 5 மணிக்கு கோபுர தரிசனம் பகல் ஒருமணிக்கு அனுகிரக தரிசனமும் நாளை காலை 9 மணிக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெறுகிறது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையையொட்டி 5 ஆயிரம் வாழைத்தார்கள் விற்பனை