திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டு வார செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழவேற்காடு பகுதியில் லைட் ஹவுஸ், ஊராட்சிக்குட்பட்ட கலங்கரை விளக்கம், திருமலை நகர் ஆகிய கிராமங்களில் பள்ளிகள், பொது இடங்களுக்கு மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.
மேலும் திருமலை நகர் அங்கன்வாடி மையத்திற்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட கடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தூய்மை குறித்த உறுதிமொழியை அப்பகுதி மக்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் விஸ்வநாதன், ’அனைவரும் சுத்தம் சுகாதாரத்தையும் இந்தப் பகுதியில் பேணிக் காக்க வேண்டும்’ என அறிவுறுத்தினார். இதில் திட்ட உதவி இயக்குனர்கள் கந்தன், அன்னபாக்கியம், மீஞ்சூர் ஒன்றியக் குழு துணை சேர்மன் சுமித்ரா குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.