திருவள்ளூர் மாவட்டம், மேட்டு மாநகர் கிராமத்து ஏரியில் சமூக விரோதிகள் சிலர் இரவு நேரங்களில் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் தேங்கும் நீர் மாசு அடைவதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இந்த செயலால் அப்பகுதியில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை தடுக்கக்கோரி அரசு அலுவலர்களுக்கு பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.