இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாபாசாகேப் அம்பேத்கர், சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத் துறை அமைச்சராக இருந்துள்ளார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடியுள்ளார்.
இந்து சமயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், இந்தியாவில் புரையோடி கிடக்கிற சாதி அமைப்புகளை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார். சாதி ஒழிப்பிற்காக தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர். அப்படிப்பட்ட நல்ல மனிதரின் சிலைகளை உடைப்பதும் அவமதிப்பதும் தொடர்கதையாகிவருவது வேதனையான விஷயம். இன்னும் இச்சமூகத்தில் பிற்போக்குச் சிந்தனை ஊறிப்போயிருப்பதையே இந்த நிகழ்வுகளெல்லாம் காட்டுகின்றன.
அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலையின் கையில் சமூகவிரோதிகள் சிலர் பரோட்டாவை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அம்பேத்கரை அவமதிக்கும் நோக்கில் செய்யப்பட்ட இச்செயலை கண்டித்து பொன்னேரியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை அதிவிரைவில் கைது செய்வோம் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் தொடரும் அம்பேத்கர் சிலை அவமதிப்பைக் கண்டித்தும் பெரியபாளையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அவமதிப்பைக் கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பொன்னேரியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அம்பேத்கர் சிலை அருகிலேயே சிசிடிவி கேமராக்கள் இருந்தும் இச்செயல் நடந்திருப்பது காவல் துறையின் மெத்தனப்போக்கையே காட்டுவதாக அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் இச்செயலை செய்தவர்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர் அப்பகுதி வாசிகள்.
இதையும் படிங்க: மாணவி ரபீஹா விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்த மதுரை எம்.பி.,!