திருவள்ளூர்: இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளின் நடவடிக்கைகள் குறித்து பேட்டி அளித்துள்ளனர்.
பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், தங்களுக்குத் தரவேண்டிய தொகையை உடனடியாக வழங்கினால் பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும் என அத்தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
பூந்தமல்லி தொகுதியில் ஏழை மாணவர்கள் படிக்க ஏதுவாக அரசு அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் பூந்தமல்லி தொகுதியில் உள்ள ஏழை மாணவர்கள் இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிய ஏதுவாக அவர்கள் தொழில் கல்வியை கற்க வேண்டும். அதற்காக பூந்தமல்லி தொகுதியில் ஒரு தொழில் கல்விக் கூடத்தை அமைக்க வேண்டும் எனவும்; படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்கள் பணியில் சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மத்திய அரசின் கிசான் திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளேன். இதை சிபிஐ வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி விவசாயிகளுக்கு உரிய வகையில் பயனளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.
தமிழ்நாட்டில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதியில் பூந்தமல்லி தொகுதியும் ஒன்றாகும். 2018-2019ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதிக்கு வரவேண்டிய ரூபாய் மூன்று கோடி நிதி வராமல் தேங்கியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததால், அந்த தொகுதிக்கு நிதி வழங்காமல் புறக்கணிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. எனவே அந்த மூன்று கோடி பணத்தை தொகுதிக்காக வழங்கினால், அதில் இன்னும் சிறப்பாக தொகுதிப் பணிகளை ஆற்ற முடியும் என்றார்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த விஜயகுமார் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், 'இப்பகுதியில் கடந்த 35 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளேன். தற்போது ஐந்து ஆண்டுகளில் கடந்த 40 ஆண்டுகளாக குடிநீர் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த ஆற்றம்பாக்கம் ஊராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று பட்டரைபெரும்புதூரில் சுமார் 40 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய் மூலமாக, ஆற்றம்பாக்கம் ஊராட்சிக்கு கொண்டுவந்து 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்து, அப்பகுதிவாசிகளின் குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது.
மேலும் எனது தொகுதியில் உள்ள 27 ஊராட்சிகளில் தற்போது சீரான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இது தவிர, கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறையால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக பெற்றோர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 27 லட்ச ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், எனது தொழிலில் உள்ள ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் ஏதாவது சேதம் அடைந்து இருப்பதாகத் தகவல் கிடைத்தால் அது குறித்து ஒன்றியப் பொறியாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். ஏற்கெனவே உள்ள கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என்றால், அதை சீரமைத்தோ அல்லது இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்றால் கட்டும் வகையில் பல்வேறு ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும். இந்த தொகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி பல ஏரிகள் குடிமராமத்துத் திட்டம் மூலம் தூர்வாரி ஆழம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்தால் அங்கு நீர் பிடிப்பு ஏற்பட்டு, நீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூண்டியில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக நீரை சேமிக்க கும்மிடிப்பூண்டி தொகுதி கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகைப்பகுதியில் ஒரு டிஎம்சி அளவு தண்ணீர் தேக்கி வைக்கும் புதிய நீர்த்தேக்கம் ரூபாய் 300 கோடி செலவில் அமைக்கப்பட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இது எனது ஆட்சிக் காலத்தில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். மேலும் இது ஒரு முக்கிய சாதனை' எனவும் கூறினார்.
இதையும் படிங்க: 'டீக்கடைக்குள் நூலகம்' - அருவி டீக்கடைக்குள் அறிவை வளர்க்கும் புத்தகங்கள்