திருவள்ளூரை அடுத்துள்ள பொன்னேரியின் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள எல் & டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 1,432 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ரோந்து கப்பலை வடிவமைக்க ஒப்பந்தம் செய்திருந்தது.
ஏற்கனேவே , 5 ரோந்துக் கப்பல்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று 6ஆவது அதிநவீன ரோந்துக்கப்பல் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிநவீன ரோந்துக் கப்பலைக் கடலில் இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போது 61 கப்பல்கள் மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆறுகளை இணைத்து நீர்வழி போக்குவரத்தை தொடங்குவது குறித்து, 36 இடங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் எல் & டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ள அதிநவீன ரோந்துக்கப்பல் 98 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும், 2,100 டன் எடை கொண்டதாகும். 26 நாட்டிகள் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரோந்துக் கப்பல் 5000 மைல் வரை கரைக்குத் திரும்பாமல் கடலில் பயணிக்கும் திறன் கொண்டதாகும்.
இந்த கப்பலின் மூலம் எல்லைதாண்டிய ஊடுருவல், கடத்தல் போன்ற குற்றச்செயல்களை எளிதாக கண்டறிந்து தடுக்க முடியும். அந்த வகையில் அதிநவீன துப்பாக்கிகள், ஹெலிகாப்டர் இறங்குதளம் என பல்வேறு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு இந்த ரோந்துக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் நடராஜன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க : பரணி டெக்ஸ் நிறுவனத்தில் திடீர் வருமானவரி சோதனை