திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களில் ஊழியர்களை பணியமர்த்துவதில் 6 ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுங்குவார்சத்திரம் பகுதியைச்சேர்ந்த நரேஷ் என்பவர் ஒப்பந்தம் செய்து அதிக அளவில் வடமாநில இளைஞர்களை பணியமர்த்தி வந்துள்ளார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த முத்தீஷ் மற்றும் பிரபு ஆகிய இருவரும் கூடுதலாக தங்களுக்கு ஒப்பந்தப்பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தொழிற்சாலையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர்களுடன் சண்டையிட்டதாக கூறப்பட்டது.
அதற்கு அவர் ஓர் ஆண்டுக்குப் பிறகு தருவதாக தெரிவித்ததையடுத்து இதனால் ஆத்திரம் அடைந்த முத்தீஷ் மற்றும் பிரபு ஆகியோர் தனது கூட்டாளியுடன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வடமாநில இளைஞர்கள் தங்கி உள்ள பேரம்பாக்கம் பகுதிக்குச் சென்று அவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் அப்துல்அசின் என்ற வடமாநில இளைஞர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முத்தீஷ்(27), பிரபு(33), தினேஷ்(29), சிமியோன்(21), திவாகர்(25), ராஜேஷ்(29), தினேஷ்(24), சூர்யா(29), முகேஷ்(24), பிரகாஷ்(19) ஸ்டீபன்(29) ஆகிய 11 பேரை கைது செய்து திருத்தணி கிளை சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கீழச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் தேவிகலா ஆரோக்கியசாமி மகன் தேவா என்கிற தேவாஆரோக்கியம்(25) என்பவரைக் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்!