சென்னை செங்குன்றம் அடுத்த வடகரை அழிஞ்சிவாக்கம் செல்வவிநாயகர் நகரில் நேற்று அதிகாலை தனியாருக்கு சொந்தமான இடத்தில், சடலம் ஒன்றை புதைப்பதாக செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சென்று விசாரித்ததில் சம்பந்தப்பட்ட ஆட்கள் யாரும் அங்கு இல்லை.
இதையடுத்து அழிஞ்சிவாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அன்னலட்சுமி, செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்ததில் சென்னை ராயபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த மோகின் அபூபக்கர் என்பவரது தந்தை நிஜாமுதீன் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடலை இஸ்லாமியர்களுக்கு சொந்தமான அடக்கஸ்தலத்தில் புதைக்காமல், சொந்த இடத்தில் புதைக்க வேண்டும் என்றும், அப்போதுதான் ஆன்மிகவாதியான நிஜாமுதீனின் ஆசி தங்களுக்கு கிடைக்கு என்பது குடும்பத்தினரின் நம்பிக்கை.
இதனால், செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சி செல்வவிநாயகர் நகரில் 2400 சதுர அடி இடத்தை நேற்று பத்திரப்பதிவு செய்தபின், சடலத்தை கொண்டுவந்து புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில், பொன்னேரி தாசில்தார் வில்சன் மற்றும் வருவாய்த்துறையினர் சடலத்தை தோண்டி எடுத்து அவர்களது சொந்த ஊரான சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.