திருவள்ளூர்: திருத்தணியை அடுத்த பெரியகளக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரவேலு என்பவர் பெரியகளக்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக உள்ளார்.
இவர் கூட்டுறவு வங்கித் தலைவர் மற்றும் வங்கிச்செயலாளர் மீது புகார் அளித்துள்ளார். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதை அடுத்து தனது புகார் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் படி தகவல் அறிய மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால், அவரது மேல்முறையீட்டு மனுவுக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மனுவை படிக்காமல் அனுப்பிய அலுவலர்
இதை அடுத்து அவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 'நான் கடந்த ஆண்டு ஏப்ரல் 22 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில், பதிவுத் தபாலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி பெரியகளக்காட்டூர், வங்கித் தலைவர், வங்கிச்செயலர் மீது அளித்தப் புகார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் புகார் குறித்து தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005-ன் படி இந்த ஆண்டும், இன்று வரையில் தங்களுக்கு மேல்முறையீட்டு மனுக்கள் தவறாமல் செய்து வருகிறேன்.
தபால் மூலம் எனக்கு சான்றிட்டு வழங்க கேட்டதற்கு சரியான பதில் இல்லை.
எனவே, நான் தங்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர் யார் என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கவும்; இது போன்ற தவறு செய்தவர்களுக்கு தகுந்த தண்டனையாக மனுதாரர்களை செருப்பால் அடிக்க சட்ட அமைச்சகத்துக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் பரிந்துரை செய்ய தங்களைப் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை அங்கிருந்த அலுவலர்கள் படித்துப் பார்க்காமல், யார் மீது அவர் புகார் தெரிவித்தாரோ, அந்த கூட்டுறவு துறை அலுவலருக்கே அனுப்ப பரிந்துரை செய்து அனுப்பியுள்ளனர்.
செருப்பால் அடிக்க பரிந்துரை செய்யச் சொல்லி, சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.