திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் மணலி எஸ்ஆர்எப் ஜங்ஷன் அருகே மணலி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கண்ணகி தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயங்கர வேகத்துடன் தணிக்கையில் நிற்காமல் சென்றனர்.
இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை விரட்டிப் பிடித்தனர். பின்னர், அவர்களை சோதனை மேற்கொண்டதில் அனைவரும் பட்டாக்கத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதில் கௌரி சங்கர், சதீஷ், கார்த்திக் ஆகியோர் கையில் தலா ஒரு நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், பிரபல ரவுடி ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்த கௌரி சங்கர், ஞாயிறு பகுதியைச் சேர்ந்த சதீஷ், செங்குன்றத்தைச் சேர்ந்த பசுபதி, வண்டலூரைச் சேர்ந்த செல்லா என்ற செல்வகுமார், காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த குகன் ராஜா, மாத்தூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 6 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, அவர்களிடமிருந்த ஆறு கத்திகள், மூன்று நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.