திருவள்ளூர் வெள்ளவேடு அருகே உள்ள மெல்மணம்பெடு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சரவணன் (15). இவரும் ஜீவி நாயுடு சாலையைச் சேர்ந்த கிருபை ராஜ் என்பவரின் மகன் குபேந்திரன் (15) ஆகிய இருவரும் திருவள்ளூர் லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தனர்.
இவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வாங்குவதற்காக இன்று காலை பள்ளிக்குச் சென்றுள்ளனர். ஆனால், ஹால் டிக்கெட் மாலை 4 மணிக்கு மேல் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதனால் தனது நண்பர்களுடன் பூண்டி நீர்தேக்கத்திற்குச் சென்றுள்ளனர்.
பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து புழல் ஏரிக்குத் தண்ணீர் செல்லும் இணைப்பு கால்வாயில் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சரவணனும், குபேந்திரனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் சடலத்தை மீட்டனர்.
பின்னர் சரவணன், குபேந்திரன் ஆகியோரின் உடல்களை உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்தவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், புல்லரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'விளையாட்டு விபரீதம்' குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!