திருவள்ளூரை அடுத்துள்ள மாங்காடு கெருகம்பாக்கம் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையோர பள்ளத்தில் சிக்கி நின்றது. அப்போது அதிலிருந்து அலறல் சத்தம் கேட்க அங்கிருந்த பொதுமக்கள் காரின் அருகே சென்று பார்த்தனர்.
அப்போது அந்த காருக்குள்ளே ஒரு இளம்பெண்ணும் மூன்று இளைஞர்களும் இருந்துள்ளனர். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்த இளம்பெண் கதறியபடி இருந்ததைக் கண்ட பொதுமக்கள், அந்த இளைஞர்களை சரமாரியாகத் தாக்கி, அந்த இளம் பெண்ணை மீட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் விசாரணை செய்ய காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.
விசாரணையின் போது கடத்தல் சம்பவத்தில் பிடிபட்ட நபர் மதனந்தபுரத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் என்பதும், அவர் கல்லூரியில் தன்னுடன் படித்த, உளவுப்பிரிவு பெண் அதிகாரியின் மகளும் மாணவியுமான கடத்தப்பட்ட பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் அந்த இளைஞரின் காதலை அப்பெண் ஏற்க மறுத்ததால், அந்தப் பெண்ணைக் கடத்தி, கட்டாயத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார், அந்த 18 வயது நிரம்பிய இளைஞர்.
பின்னர் தனது நண்பர்களான 11ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களை கூட்டுச் சேர்த்து கடத்தல் சம்பவத்தில், 18 வயது அக்கல்லூரி மாணவர் ஈடுபட்டுள்ளார். கல்லூரி மாணவியை கடத்திக்கொண்டு சென்றபோது அவர்கள் சென்ற கார் பள்ளத்தில் சிக்கியதாலேயே மூவரும் மாட்டிக் கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இருவர் விசாரணைக்குப் பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவரை சென்னை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க : பெரியார் குறித்து ரஜினி சிந்தித்து பேசவேண்டும் - மு.க. ஸ்டாலின்