திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமி ரெட்டி கண்டிகை கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. நேற்று இரவு கடையின் ஊழியர்கள் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று மதியம் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத வடமாநில திருடர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், பெட்டகத்தில் இருந்த ஐந்து ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமையில் வியாபாரமான இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை ஊழியர்கள் காலி அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைத்துள்ளனர். இதனால், திருடர்களிடம் இருந்து அந்தப் பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
இ துகுறித்து கடையின் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பெயரில் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற வடமாநில திருடர்கள் என்ற கோணத்தில், அவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.