திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள ஏளாவூர் ஒருங்கிணைந்த வாகன சோதனைச் சாவடியில் இன்று காவல் துறை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் பேருந்திலிருந்த ஒருநபர் கொண்டு வந்திருந்த இரண்டு பைகளில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 92 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த நபரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் ஆந்திர மாநிலம் சிலக்கலூர் பேட்டையைச் சேர்ந்த சம்பவா சிவராவ் என்பதும், சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை எடுத்துவந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த நபரை வருமானவரித் துறையினைரிடம் ஒப்படைக்கவுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பணம் கொண்டுவந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காரில் கடத்தப்பட்ட 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்