திருவள்ளூர்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ள நிலையில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
திருத்தணி அருகில் உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் டி.டி.சி அப்ரூவல் பெற்ற வீட்டு மனைகளில் 10க்கும் மேற்பட்ட மாடி வீடு கட்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக, இந்த கிராமத்தின் அருகில் உள்ள டி.வி புரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த நீரினால் காசிநாதபுரம் மக்கள் வசிக்கும் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே வர முடியாத நிலையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் குழந்தைகள், பெண்கள் உள்பட ஒன்பது நபர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பிரவீனா கூறுகையில், “டி.டி.சி அப்ரூவல் வீட்டு மனைகள் என்று எங்களிடம் இதனை ஏமாற்றி விட்டனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக எங்கள் வீடுகளுக்குள் நான்கு அடி ஆழத்திற்குத் தண்ணீர் புகுந்து விட்டது.
இதனை வெளியேற்றுவதற்கு உரிய கால்வாய்களை ஏற்படுத்தாமல் இதனை ஆக்கிரமித்துள்ளனர். இதை அப்புறப்படுத்தாமல் வருவாய்த் துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால் நாங்கள் வீடுகளில் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் வந்து விடுமோ என்ற உயிர் பயத்தில் இருந்தோம்.
மேலும், கடந்த இரண்டு நாட்களாக மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பு கால்வாய்களை அகற்றி கிராமத்தில் தண்ணீர் புகாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு முக்கிய காரணம் மனிதர்கள்” - பூகம்ப ஆராய்ச்சியாளர் சரவணக்குமார்!