தமிழ்நாடு - ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் ஆரம்பாக்கம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது, ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் காவல் துறையினர் சந்தேகமடைந்தனர்.
அதனையடுத்து, காரின் பின் பக்கத்தை திறந்து பார்த்தபோது, செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் செம்மரக்கட்டைகளை கடத்தியவரை கைது செய்தனர்.
ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் எனவும், நெல்லூரை சேர்ந்த ராவண் பாப்பையா என்பவர் சென்னைக்கு கடத்தி சென்றபோது பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், யாருக்காக கடத்தப்படுகிறது, முக்கிய குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.