திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த விவசாயியான ஆனந்தன் என்பவர் பெரியக்காவணம் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான 95 சென்ட் நிலத்தில் பயிர் செய்து வருகிறார். இந்த இடத்தை இவர் கடந்த 1986ஆம் ஆண்டு, நித்யானந்தம் என்பவரிடமிருந்து கிரையம் பெற்று தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு பர்மா அகதிகள் மறுவாழ்வு நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பர்மா அகதிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய வீட்டு மனையை ஆனந்தன் என்பவர் சட்டவிரோதமாக கையகப்படுத்தி மதில் சுவர் கட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விவசாயி ஆனந்தன் தரப்பில், நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதால் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக தடை ஆணை பெற்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மீண்டும் மறு விசாரணை நடைபெற்ற போது, ஆனந்தன் தரப்பினர் ஆஜராகாததால் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, வருவாய்த்துறை அலுவலர்கள் காவல்துறையினரின் உதவியோடு சர்ச்சைக்குரிய இடத்தில் எழுப்பப்பட்டிருந்த மதில் சுவரை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி, சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்டனர்.
அலுவலர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆனந்தன் தரப்பினர், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுள்ளதால் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.