திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் என்பவர் நேபாளத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு மர்ம மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடலை தமிழ்நாடு கொண்டுவர வேண்டும் என அவருடைய பெற்றோர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு வாலிபால் வீரர் ஆகாஷின் உடல் காட்மண்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. நேபாள நாட்டின் போக்ரா நகரத்தின் ரங்கசாலா பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்ற வாலி பால் விளையாட்டு போட்டியில் கடந்த 21ஆம் தேதி ஈரோடு மாவட்டம் தனியார் யூ.எஸ்.ஏ கிளப்பின் உரிமையாளர் நாகராஜ் தலைமையில் 20 பேர் பங்கேற்க சென்றிருந்தனர்.
அந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் (27) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை 8 மணியளவில் நேபாள அணிக்கெதிராக பங்கேற்று முதல் சுற்றில் விளையாடியுள்ளார். அப்போது முதல் சுற்று முடிந்து ஓய்வெடுக்க சென்று இருந்த அவர் திடீரென 11 மணியளவில் இரண்டு முறை வாந்தி எடுத்ததாகவும் அதன் பின் அவருடன் சென்ற சக வீரர்கள், பயிற்சியாளர் நாகராஜ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உடலை பரிசோதித்த பின் தெரிவித்துள்ளனர். அதன் பின் பயிற்சியாளர் நாகராஜ் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் அவரது உடலை அங்கிருந்து மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இத்தகவல் ஆகாஷின் உறவினருக்கு தெரிய வந்ததால் அவருடைய உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு உடனடியாக நேபால் அரசிடம் பேசி நேற்று இரவு வாலிபால் வீரர் ஆகாஷின் உடல் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான், விசிக தலைவர் தொல் திருமாவளவன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் ஆகியோர் விமான நிலையத்தில் வாலிபால் வீரர் ஆகாஷின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஆகாஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் 300க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் புடைசூழ ஆறு கிலோமீட்டர் தொலைவிற்கு ஆகாஷின் உடல் பேரணியாக எடுத்து செல்லப்பட்டு அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருப்பதிக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொத்தை வழங்கிய திருவள்ளூர் செவிலியர்