திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்துவரும் பூர்வகுடி பழங்குடியினரான இருளர் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி போராடிவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரூராட்சியில் இருளர் இன மக்களுக்குப் பட்டா வழங்க டோக்கன் விநியோகித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை
அதேபோல் திருத்தணி ஆர்கே பேட்டை, பூவிருந்தவல்லி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட மொத்தம் 27 ஊராட்சிகளில் வசித்துவரும் 566 குடும்பத்தினருக்கு இதுவரை வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை.
மாவட்ட ஆட்சியர் முதல் பல அரசு அலுவலர்களுக்கு மனு கொடுத்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (நவ. 3) போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இந்தச் சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.