திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட புதுச்சத்திரம் பகுதியில் தனியார் கப்பல் கல்லுாரி கட்டடத்தில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் மொபைல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன் விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவு சாப்பிட்ட மூன்று பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் (டிச.14) இரவு உணவு சாப்பிட்ட 97 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களை மீட்ட சக ஊழியர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வெளியூர் சென்றிருந்த ஊழியர்கள் நேற்று விடுதிக்கு திரும்பினர். இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களின் நிலை குறித்து சரியான தகவல் தெரிவிக்காததால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் திருவள்ளூர் - பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த பூந்தமல்லி தாசில்தார் சங்கர், திருவள்ளூர் கோட்டாட்சியர் ரமேஷ், டி.எஸ்.பி. சந்திரதாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை மறியலை ஊழியர்கள் கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.
100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். உணவு, தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் உரிய அனுமதி இல்லாமல் இங்கு விடுதி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அதிக பெண்கள் பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: வேகமாகப் பரவும் ஒமைக்ரான்... தமிழ்நாட்டில் ஒன்பது பேருக்கு பாதிப்பு?