திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த அமுதூர்மேடு கிராமம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ரியல் எஸ்டேட் தொழில், மீன் வியாபாரம் செய்துவருகிறார். மேலும் பாமகவில் பொறுப்பிலும் உள்ளார்.
இந்நிலையில், கார்த்திகேயன் பட்டாபிராம் அணைக்கட்டுச்சேரி பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அமுதூர்மேடு புற்று கோயில் அருகே எதிர்பாராத விதமாக முன்னே சென்ற தனியார் நிறுவன பேருந்து கார்த்திகேயனின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கார்த்திகேயனின் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதனைப் பார்த்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பேருந்தும் நிற்காமலே சென்றால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் பேருந்தை கல், உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கியதோடு தீயிட்டும் கொளுத்தினர். பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அசம்பாவிதங்களை தவிர்க்க அதிரடிப்படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல் விபத்து சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கார்த்திகேயன் தந்தை உயிரிழந்து 3 நாட்கள் ஆன நிலையில் கார்த்திகேயனின் வீட்டுக்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.