திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியானது சுற்றுலா மற்றும் மீன்பிடி பகுதியாகும். இங்கு தினசரி மீன்பிடி தொழில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நேற்று (ஜன.15) பழவேற்காடு முகத்துவாரம் வழியாக டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் பழவேற்காடு ஏரியில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது.
காணும் பொங்கலையொட்டி மீனவர்கள் யாரும் பழவேற்காட்டில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் கரை ஒதுங்கியதை எவரும் கவனிக்கவில்லை.
இந்நிலையில் கரை ஒதுங்கிய மீனில் இருந்து துர்நாற்றம் வரவே அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது சுமார் ஒரு டன் எடை மதிப்புள்ள டால்பின் கரை ஒதுங்கியது தெரியவந்தது.
இதனையடுத்து இதுதொடர்பாக மீன்வளத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மீனில் இருந்துவரும் துர்நாற்றம் அப்பகுதி முழுவதும் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்த நிலையில் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.