திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மேட்டுப் பகுதியில் வசித்து வருபவர் வடிவேல்(40). லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர் மீது திருத்தணி காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வழக்கம்போல் லாரி ஓட்டிவிட்டு திருத்தணி ரயில் நிலையத்தில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது, பட்டப்பகலில் அந்தப் பகுதிக்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென வடிவேலுவைச் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வடிவேலுவை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
ஆனால், அவருக்கு கை காலில் பலத்த வெட்டுக்காயம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையே, முன் பகை காரணமாக வடிவேல் வெட்டப்பட்டாரா அல்லது மது , கஞ்சாவை விற்பனை செய்து வருவதால் அதில் ஏற்பட்ட மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் வெட்டப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.