திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் வந்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் குன்றத்தூர் காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்துவந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் சம்சுதீன் என்பவர் கடையில் குட்கா விற்கப்படுவதாக தெரியவந்ததையடுத்து, காவல் துறையினர் சென்று குட்காவை பறிமுதல்செய்தனர்.
மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுப்பையா என்பவர் குட்காவை மொத்தமாக சப்ளை செய்வதாகத் தெரிவித்ததையடுத்து சுப்பையா வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர் சுமார் 200 கிலோ குட்காவை பறிமுதல்செய்தனர்.
சுப்பையா குட்காவை மொத்தமாக வாங்கிவந்து வீட்டில் பதுக்கிவைத்து குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சப்ளை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல்செய்துள்ளனர்.