திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே பிரித்திவி நகரில் குமார் (42) என்பவருக்குச் சொந்தமான குமார் ஆட்டோ ஒர்க்ஸ் எனப்படும் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பழுது பார்ப்பதற்காக விடப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களை வழக்கம்போல் நிறுத்திவிட்டு, குமார் வீட்டிற்குச் சென்றார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 05) அதிகாலை வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியே வந்த குமார், கடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், முகமூடி அணிந்து மேலாடை போர்த்தியபடி வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்ததைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர், அதன் மூலம் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நகை வாங்குவதுபோல் நடித்து 10 சவரன் நகைகள் திருட்டு: CCTV-யினை வைத்து போலீஸ் விசாரணை