திருவள்ளூர்: ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச்சேர்ந்தவர் கார்ப்பென்டர், வெங்கடேசன். இவர், காவல் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் மீது திருவள்ளூர் நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் போன்றவற்றில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரில், கடந்த ஜூன் மாதம் உறவினர் இறப்பிற்குச்சென்ற தன்னை, தனக்கு தொடர்பு இல்லாத சண்டையை காரணம்காட்டி காவலர்கள் கைது செய்ததாகவும், பின் காவல் நிலையத்தில் வைத்து குற்றவாளி போல் கையில் விலங்கு போட்டு, பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, 5 மணி நேரம் ஒரு அடிமையை போல் நடத்தியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை விசாரித்த திருவள்ளூர் நீதிமன்றம், ஆய்வாளர் மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. மேலும், விசாரணைக்காக ஆய்வாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, புகார் அளித்த வெங்கடேசனை, காவல் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் கூலிப்படையை வைத்து மிரட்டுவதாகவும், பணம் தருவதாக பேரம் பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வெங்கடேசன் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
இதனைவிசாரித்த திருவள்ளூர் நீதிமன்றம், வெங்கடேசன் புகார் குறித்து ஆவடி துணை ஆணையர் அடுத்த மாதம் அக்டோபர் 17ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வெங்கடேசன் மற்றும் அவரது வழக்கறிஞர் ஸ்ரீதரன் பாபு ஆகியோர் கூறுகையில், 'காவல் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதும், இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசியும் வருகிறார். இதற்கான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் உள்ளது.
சட்ட ரீதியாகப் போராடி வருகிறோம். தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். 5 மணி நேரம் கை விலங்கு போட்டு, அடித்து உதைத்து சித்ரவதை செய்தமைக்கு ஆய்வாளருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்' என கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: வேலைக்கு சென்ற இந்தியர்களை ஏமாற்றி சமூக விரோத வேலைகளுக்காக மியான்மரில் சித்திரவதை