தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அமர்ந்து செல்வோர் என இருவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதனை பொருட்படுத்தாமல் சிலர் தலைக்கவசம் அணியாமல் வலம் வருவது குறித்து நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து காவல்துறையினர் ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே தலைக்கவசம் அணியாமல் வந்த மகளிர் உட்பட சுமார் 380 நபர்களை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆவடி பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை ஒருவரை கூட விடாமல் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் வாகன ஓட்டிகள் வரும் காலங்களில் அபராதத்திற்கு பயந்தாவது விழிப்புணர்வுடன் தலைக்கவசம் அணிவார்கள் என எதிர்பார்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.