திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் கிராமத்தில் அமைந்துள்ளது நிலத்தடி கருப்பசாமி கோயில். மிகவும் பிரபலமான இக்கோயிலில் ராஜசேகர் என்பவர் கோயிலிலேயே தங்கி அங்கு வரும் பக்தர்களுக்குச் சாமியாடி கைகளில் வீச்சருவாளுடன் அருள்வாக்கு சொல்லிவருகிறார்.
இச்சூழலில், கோயிலுக்கு இரவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், ராஜசேகர் தங்கியிருந்த கோயில் அறைக்குப் பின்புறம் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனால், அந்த அறை தீப்பிடித்து எரிந்தது. அவர் வெளியூர் சென்றிருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். இந்த விவகாரம் பூதாகரமாகி கிராமத்திலுள்ள இரு தரப்பினரிடையே பிரச்னை உருவானது. இதில் கோபமடைந்த ஒரு தரப்பினர், கோயிலைப் பூட்டிச்சென்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில், மீஞ்சூர் காவல் துறையினர், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்களிடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிராம மக்களில் ஒரு தரப்பினர் ராஜசேகர் அருள்வாக்கு சொல்லக் கூடாது எனவும் மற்றொரு தரப்பினர் அவர் அருள்வாக்குச் சொல்ல வேண்டுமெனவும் மாறி மாறி விவாதித்தனர். மேலும், பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இன்னும் சமரச முடிவு எட்டப்படவில்லை என்பதால் காவல் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் - தந்தை நாடகம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்