ரமலான் மாதத்தின் சிறப்பு தொழுகையை இரவு 10 மணிவரை நடத்த அனுமதி கோரி திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சீனி ஹாத்திம் கனி,மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர் மெளலானா சதகத்துல்லா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ”முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் மாதம் 13ஆம் தேதி முதல் வருகிறது. இம்மாதம் முழுவதும் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் விசேஷ கூட்டுத் தொழுகையில் ஈடுபடுவது இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய அம்சமாகும். நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி இரவு 8 மணிவரை மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் இயங்கும் என்பதை அறிந்திருக்கிறோம்.
எனவே, புனித ரமலான் மாதத்தின் இரவு நேர வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில், பள்ளிவாசல்கள் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து புனித ரமலான் மாதத்தின் இரவு நேர வழிபாடுகளை மேற்கொள்வோம்” எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்