திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கிராமம் ஒன்றில் சுமார் ஒருவார காலமாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அலுவலர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருத்தணி பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி காவல்நிலையத்தினர், நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். அப்போது அலுவலர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் பெரிய அளவில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.