திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது எளாவூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றின் பைப்லைன் வழியாக மது கால், ஆள பிள்ளை கண்டிகை, ஆலமரத்து காலனி உள்ளிட்ட மூன்று கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் ஆழ்துளைக் கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இந்த குறைந்தளவு தண்ணீரையும் சென்னாரெட்டி கண்டிகை கிராம மக்கள் முக்கிய பைப் லைனில் அனுமதியின்றி எடுத்துக்கொள்வதாக தெரிகிறது.
இதனால், ஆலமரத்து காலனி கிராமம் உள்ளிட்ட மூன்று கிராமங்களுக்கும் முறையாக குடிநீர் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், மாற்றுப்பாதையில் குடிநீர் பைப் லைன் மற்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் நாங்கள் ஆறு கிலோ மீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வரக்கூடிய அவல நிலை ஏற்படும் எனவும் மூன்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இது குறித்து பலமுறை அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட அம்மக்கள், அரசு வழங்கிய வாக்காளர் அட்டை, ஆதார் கார்டுகள் ஆகியவற்றை தரையில் வீசி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தண்ணீர் கிடைக்காமல் தவித்து வரும் எங்களுக்கு, இதே நிலை நீடித்தால் நாங்கள் அந்த ஊரை விட்டே காலி செய்வதைத் தவிற வேறு வழியில்லை என்றனர்.