திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி புறவழிச்சாலையை ஒட்டிய பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (22). டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துவிட்டு தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவர், கல்லூரியில் படிக்கும்போதே சிரிஷா (22) என்பவரைக் காதலித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்துவரும் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் காதலும் சிரிஷாவின் பெற்றோருக்கு தெரியவரவே, அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்தனர்.
இதனை ஜெகனிடம் கூறிய சிரிஷா சென்ற மாதம் அவருடன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் இருவரும் கடந்த 21ஆம் தேதியன்று திருப்பதிக்குச் சென்று அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இதனையறிந்த சிரிஷாவின் பெற்றோர் இளம் காதல் ஜோடியை கொலை செய்ய திட்டமிட்டு அவர்களை போன் செய்து தொடர்ந்து மிரட்டிவந்துள்ளனர்.
இந்நிலையில், காதல் ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி இன்று திருவள்ளூரிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். அப்போது, சிரிஷா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் தங்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் இருவரையும் கொலை செய்யும் நோக்கில் ஆட்களை ஏவி தேடி வருவதாகவும் தங்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கக்கோரியும் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள்: பொதுமக்கள் விரட்டிப் பிடிப்பு!