சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அவருடன் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் சென்றனர்.
சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேசிய பின், சிறை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், ”நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட திமுகவினர் முயன்ற போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவர்களை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார்.
இதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் பல்வேறு வகையில் ஆளும் அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது எனவும், இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் கூறினார்.
தேனி மாவட்டத்தில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அவர்களை காவல் துறையினர் திமுகவில் சேர வற்புறுத்துவதாகவும் அவர் கூறினார்.
அதிமுகவின் 50 ஆண்டு காலத்தில் பல போராட்டங்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும், எந்த வித அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் எனவும், கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்கு பதியாமல் அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அரசு அச்சுறுத்தல் நடத்தி வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். ஜெயக்குமார் நலமாக உள்ளதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:'அதிக மருத்துவ முகாம் தடுப்பூசி என அனைத்திலும் தமிழ்நாடு முதலிடம்!'