உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால், மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தின. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் மூட உத்தரவிட்டிருந்தது. அதேபோல், அரசு வருமானத்தை வாரி கொடுக்கும் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான கடைகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் மே 7ஆம் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது. இருப்பினும் மதுபானம் வாங்க வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலைச்சேரியில் கடந்த 7ஆம் தேதி அரசு மதுபான கடை திறக்கப்பட்டது. அப்போது, அந்த மதுபான கடையில் உள்ளூர்வாசிகள் மட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இரு சக்கர வாகனத்தில் வந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நெரிசல் உடன் அலைமோதி மதுபானத்தை வாங்கிச் சென்றனர்.
ஏற்கனவே ஊரடங்கை மிகுந்த சிரமத்துடன் பொதுமக்கள் கடைப்பிடித்து வரும் வேளையில் இது போன்ற மதுப்பிரியர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல், அதுவும் வெளியூர் வாசிகள் அனைவரும் வந்து அங்கு குவிந்தனர். இதனால், அப்பகுதி பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அந்த மதுபான கடையை முற்றுகையிட்டு எங்கள் ஊரில் உள்ளவர்கள் கூட மதுபானம் வாங்க வரவில்லை, வெளியூரிலிருந்து இங்கு வந்து மது வாங்குகிறார்கள் என்று போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பெண்கள் சமாதானப்படுத்தி அழைத்து வர தண்டலச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தராஜ் அங்கு சென்றார்.
ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கும்மிடிபூண்டி காவல் ஆய்வாளர் சக்திவேல் பொதுமக்கள் மீது தடியடி நடத்தியதோடு ஊராட்சி மன்றத் தலைவர் என்று கூட பார்க்காமல் அவர் மீதும் சராமரியாக தாக்கியுள்ளார். பின்னர் இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில், சக்திவேல் போன்ற காவல் ஆய்வாளர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து கூட்டமைப்பு சார்பில் புகார் மனுவை அளித்தனர்.
அப்போது, ஆனந்தராஜ் கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.எம்.ரவி, சதீஷ், வெங்கடாசலம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சேகர், கலைமதி, சங்கர், ஜீவா, செல்வமணி, சுகுமார், கோமதி, சுதா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:'எதிர்க்கட்சிகள் மக்களுக்கு கடலைமிட்டாய்கூடத் தரவில்லை'