திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரி ஊராட்சியில் திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர், பிரபாகரன். இவர் பட்டியல் இனப்பெண்ணை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவினை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் காப்புகட்டி தீ மிதித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த தீ மிதித்திருவிழாவில் பிரபாகரன் கடந்த 15 ஆண்டுகளாக கலந்துகொண்டு தீ மிதித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித்திருவிழா நடைபெற உள்ள நிலையில் பிரபாகரன், அவரது சகோதரர் கார்த்திக் ஆகிய இருவரும் தீ மிதித்திருவிழாவில் கலந்துகொள்ள காப்புக்கட்டுவதற்கு கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது ஊராட்சி மன்றத்தலைவர் பாபு மற்றும் கோயில் நிர்வாகிகள் ஆகியோர் பிரபாகரன் மற்றும் கார்த்திக்கிடம் ’’நீங்கள் பட்டியல் இனப்பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், உங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்திலிருந்து யாரும் கோயிலுக்கு வந்து சாமியை வழிபடக்கூடாது’’ என எச்சரித்து உள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபாகரனின் குடும்பத்தினர் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் கோயில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சி.கல்யாணிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:சைவ உணவு உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் - ஆய்வில் அதிர்ச்சித்தகவல்!