பூவிருந்தவல்லி ஒன்றியத்துக்குட்டபட்ட பானவேடு தோட்டம் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு-வருகிறது.
இதன் காரணமாக தங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவருவதோடு தண்ணீரின் தன்மையும் சீர்கெடுவதாகக் கூறி இன்று பாரிவாக்கம்-பூந்தமந்தி சாலை வழியாக வந்த தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கேட்டபொழுது, கடந்த காலத்தில் பானவேடு தோட்டம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 20 அடியில் தண்ணீர் வந்ததாகவும், தற்போது லாரிகள் மூலம் சட்டவிரோமாக குடிநீர் திருடப்படுவதால், நிலத்தடி நீர் 100 அடிக்கும் கீழே சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
இதன்காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்குள் உரிய அனுமதியின்றி செயல்பட்டுவரும் ஆழ்துளைக் கிணறுகளை மூடவேண்டும், இல்லையேல் அடுத்தகட்டமாக பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் சிறுதி நேரம் பதற்றம் நிலவியது.