மேலப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். கவின் கலைக் கல்லூரில் பயின்றுவரும் இவர், தனது மண்ணிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். அதன்படி, தனது பகுதியில் மரங்களை நட முடிவுசெய்த விக்னேஸ்வரன் அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், இயற்கையை மீட்டெக்க சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அந்தப் பதிவில், 'மேலப்பேடு பகுதியில் மரக் கன்றுகள் நட திட்டமிட்டுள்ளேன். அதனைப் பாதுகாக்க இரும்பு வளையங்கள் தேவைப்படுகின்றன. எனவே, உங்களால் முடிந்தால் எனக்கு 30 மரக்கன்றுகள் வழங்குங்கள்' என கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து விக்னேஸ்வரன் கூறுகையில், "நான் வாழும் இந்த மேலப்பேடு கிராமம் விவசாய நிலமாக இருந்தது. நாள்போக்கில் நீர் குறைந்து விவசாயம் மறைந்துவிட்டது. எனவே இங்கு இயற்கையை மீட்டெடுக்கும் நோக்கில் மரக் கன்றுகள் நட்டுவருகிறேன்.
இதில், ஒரு பகுதியாக 30 மரக்கன்றுகள் நட திட்டமிட்டேன். இதற்காக சமூக வலைதளங்களில் கோரிக்கைவிடுத்திருந்தேன். பலர் எனக்கு உதவ முன்வந்தனர். மரம் நடுதலின்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த விஸ்வா என்ற ஒரு வயது குழந்தை தானாக முன்வந்து மரக்கன்றுகள் நட்டது. இது எனக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது" என்றார் மகிழ்ச்சி பொங்க.
ஒரு வயது குழந்தை மரம் நட்ட சம்பவம் இப்பகுதியில் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.