இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒன்பது யூனியன் பிரதேசங்கள் உள்பட 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் நாளை மாலை ஆறு மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முடிவுற்ற நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மற்ற வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், செய்வதறியாது விழி பிதுங்கி போன வட மாநிலத்தவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மீட்டு அவர்களை சமூக நலக் கூடத்திலும் திருமண மண்டபத்திலும் சுகாதாரத் துறையின் மூலமாக பத்திரமாக அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் பிகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் மாதவரம் தபால் பெட்டி அருகிலுள்ள தனியார் மண்டபத்திலும், சூரப்பட்டு மாதவரம் மண்டலம் 24 வார்டுக்கு உள்பட்ட சமூக நலக் கூடத்திலும் 17 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மருத்துவர்கள் முறையாக கரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்ததில் தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து வட மாநிலத்தவர்களுக்கு சுகாதாரத் துறையினரும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர்களும் மூன்று வேலைகளுக்கும் உணவளித்து, பிற வசதிகளையும் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏழை மக்களுக்கு உணவளிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு!