திருவள்ளூர்: பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இதில் பீகாரை சேர்ந்த காளிமுக்யா என்ற தொழிலாளி தனது பணிகளை முடித்துவிட்டு அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் சரிந்து காளிமுக்யா மீது விழுந்ததில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அலறல் சத்தம் கேட்டு வந்த சக தொழிலாளர்கள் காளிமுக்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தாக்கவந்த சிறுத்தையை கத்தியால் வெட்டிக்கொன்ற கூலித்தொழிலாளி