கரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் குறிப்பாக பிரிட்டனிலிருந்து உருமாறிய கரோனா வைரஸ் பரவி வருவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
மேலும், ”சமீபத்திய மழையின் காரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் ஆகிய முக்கியமான பெரிய ஏரிகளில் நீர் நிரம்பிய நிலையில் உள்ளன. எனவே, நீர்நிலைகளில் பொதுமக்கள் பெருமளவில் கூடுவது, ஆபத்தான வகையில் குளிப்பது, விளையாடுவது மற்றும் படகுப் போக்குவரத்து போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, வரும் டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையிலான நாள்களில் பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் ஆகிய ஏரிகளிலும், ஊத்துக்கோட்டை தரைப்பாலம், பெரிய பாளையம் பாலம், தாமரைப்பாக்கம் தடுப்பணை, பழவேற்காடு ஏரிகடற்கரை மற்றும் நீர் நிரம்பியுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை. மேலும், இவற்றினை மீறுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்கள், தனியார் இடங்களில், அதிக அளவில் பொதுமக்கள் கூடாமல் இருக்க, மாவட்டக் காவல் துறை சார்பாக ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டும் வருகிறது