திருவள்ளூர்: பூவிருந்தவல்லி வட்டம், திருவூர் ஊராட்சிக்குட்பட்ட ராம் நகர் பகுதியில், 500 குடும்ப அட்டைதாரர்கள் இருந்து வருகின்றனர். இங்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில், வாடகை கட்டிடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கட்டிடம் பழுதடைந்து காணப்படுவதால் மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்கள் நனைந்து சேதமடைந்து வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, புதிய நியாயவிலைக் கடை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து, வாடகை கட்டிடத்திற்கு மாற்றாக அறிஞர் அண்ணா மறுமலர்ச்சி நிதி திட்டத்தின் கீழ், அதே பகுதியில் 12.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நியாயவிலைக் கடையை நம்பியே, ராம் நகர் சுற்றுப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர், ஜெய் அனுமான் நகர், சுதர்சன நகர், ராஜாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் இருக்கின்றனர்.
ஆனால் கட்டடம் கட்டி முடித்து, 5 மாதங்கள் ஆன நிலையில் நியாயவிலைக் கடை திறக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என, திருவூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், துறை சார்ந்த அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் கட்டிப்பிடித்து உருண்ட மாணவர்கள்!