திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் எம்.எம்.ஆர்.வி தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள கழிவறையின், பக்கச்சுவரின் மேல் பச்சிளம் குழந்தை ஒன்று இருப்பதாக நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் சென்று பார்த்தபோது பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சோழவரம் காவல் துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு காவல் துறையினர் உடற்கூராய்விற்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குழந்தை யாருடையது, எப்படி இங்கு வந்தது, மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வந்த யாரேனும் இங்கு குழந்தையை விட்டுச் சென்றுவிட்டார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு கர்ப்பிணிகள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் பெண்ணை முத்தமிட்டவருக்கு 7 ஆண்டுகள் கழித்து சிறை!