திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் பகுதியில் தனியார் விகேஎன் ரயில்வே மேற்கூரை தயாரிக்கும் புதிய தொழிற்சாலை தொடக்க விழா நடைபெற்றது. சீனாவிலிருந்து புதிய நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு ரூ. 8 கோடியில் அமைக்கப்பட்ட தொழிற்சாலை தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், ஆவடியில் அமைந்துள்ள கனரக வாகன தொழிற்சாலை கார்ப்பரேட் நிறுவனத்திற்கு கைமாற்றம் செய்யப்படுவதை தடுக்க தமிழக முதலமைச்சர் வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், வங்கிகளை இணைப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர் நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும், இதன்மூலம் விளைந்துள்ள நன்மைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கான ஆரம்பம் இந்த தொழிற்சாலை என்றும், மேலும் பல முதலீடுகளை இங்கே ஏற்படுத்துவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விரைவில் பாலிமர் பூங்கா உள்ளிட்ட புதிய தொழில் பூங்காக்கள் உருவாகும் எனவும் தெரிவித்தார்.