திருவள்ளூர் : கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டையூர் இந்திரா நகர்ப் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் நடந்த 15ஆண்டுகளுக்கு முன்னர் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை சீரமைக்கப்படாததால் சாலைகள் அனைத்தும் தற்போது பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர் முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கியுள்ளது. இதனால் சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை என பலதரப்பட்ட மக்களும் இந்த கழிவு நீரை மிதித்தவாறு அவதியுற்றப்படி சென்று வருகிறார்கள். இதன் காரணமாக நோய்த்தொற்று பரவும் நிலை உள்ளது.
மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சேறும் சகதியுமான சாலையைக் கடக்க முடியாமல் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் இன்று காலை கொட்டையூர் இந்திரா நகர் காலனி பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெரு அருகே சேறும் சகதியமாக உள்ள சாலையில் நாற்றுகளை நட்டு வைத்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
முன்னதாக சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்துத் தரவேண்டும். வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்களை முறையாக கொண்டு செல்ல வடிகால்வாய் வசதி அமைத்துத் தர அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்தச் சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க : பயிர்களின் நடுவே NLC-யின் கால்வாய் வெட்டும் பணி; கண்ணீரில் விவசாயிகள் - கலெக்டரின் பதில் என்ன?