திருவள்ளூர்: தர்மபுரியை சேர்ந்த லியோ தாமஸ் பீட்டர் என்பவர் தனது உறவினர்களிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50 லட்சம் பணத்தை பெற்று, அந்த பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (28) என்பவரிடம் கொடுத்துள்ளார்.
ஸ்ரீநாத் வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இந்நிலையில் லியோ தாமஸ் பீட்டர் பணத்தை தருமாறு ஸ்ரீநாத் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது ஸ்ரீநாத் 'நீங்கள் கொடுத்த பணம் அரக்கோணத்தில் உள்ள சீனிவாசன் என்பவரிடம் கொடுத்துள்ளேன். அதை திருப்பி வாங்கிக் கொடுக்கிறேன்' என்று கூறி வரவழைத்துள்ளார். இந்நிலையில் லியோ தாமஸ் பீட்டர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருப்பதாக ஸ்ரீநாத்திடம் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி முனையில் மிரட்டல்
இதனையறிந்த ஸ்ரீநாத் கூலிப்படையினரை காரில் அழைத்துவந்து பேச்சு வார்த்தை நடத்தி தகராறு முற்றி துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சந்திரதாசன், தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணை
விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஸ்ரீநாத், கூலிப்படையை சேர்ந்தவரான தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேஷ், கார் ஓட்டுநர் அரசு குமார் என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி, சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'யானை மீது பட்டாசுகளை வீசி எறிந்த வனத்துறையினர்- விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்'