திருவள்ளூர்: கரோனா தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது.
இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, பூந்தமல்லி சுகாதாரத் துறை சார்பில் பூந்தமல்லி நகராட்சியில் நடமாடும் கரோனா தடுப்பூசி தொடக்க விழா நடைபெற்றது.
இதில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு நடமாடும் கரோனா தடுப்பூசி குழுவைத் தொடங்கிவைத்தார். பூந்தமல்லி நகராட்சி வளாகத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் கரோனா தடுப்பூசி குழு புறப்பட்டது.
இந்த வாகனம் பூந்தமல்லி நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பனியையும் அதன் அவசியம் குறித்தும் இந்தக் குழு தெரிவிக்கவுள்ளது.
இந்நிகழ்வில் பேசிய நாசர், "தற்போது தொடங்கப்பட்டுள்ள நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் அலைச்சல் குறையும், வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்த உள்ளதால் பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் நிலை ஏற்படும்.
இதன்மூலம் முதியவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள் வெளியில் வந்து அலையும் நிலை இல்லாமல் அவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்" எனக் கூறினார்.
மேலும் திருவள்ளுர் மாவட்டம் ஒரு நாள் இலக்கான 50 தடுப்பூசி என்பதைத் தாண்டி 58-க்கும் அதிகமாகச் செலுத்தி சாதனை படைத்துள்ளதையும் குறிப்பிட்டு பாராட்டினார். இதற்கு மாவட்ட ஆட்சியரின் முயற்சிகளும் ஒரு காரணம் என்பதையும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாலிபான்களுடன் பேசும் பாஜக, விவசாயிகளிடத்தில் பேச மறுப்பதேன்- காங்கிரஸ்!