திருவள்ளூர்: ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ராஜம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். இவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும் என எண்ணியுள்ளார். இதனையடுத்து நவம்பர் 9ஆம் தேதி ஸ்ரீகாகுளம் - சென்னை வரையிலான 450 கி.மீ. தூரத்துக்கு நடைபயணம் மேற்கொண்டார்.
இவர் நேற்று (நவம்பர் 21) அதிகாலை தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை வந்தடைந்தார். இது குறித்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், இளைஞரை நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
தேங்கிய மழைநீரில் கால்வைத்த முதலமைச்சர்
இது குறித்து இளைஞர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சிக்காலம், பொன்னான ஆட்சிக்காலம். வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஆந்திர மாநில முதலமைச்சர் ஹெலிகாப்டர்களில் பறந்தபடி பார்த்தார். தமிழ்நாடு முதலமைச்சரோ தேங்கிய மழைநீரில் வீடு, வீடாகச் சென்று பார்த்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மேலும் பெண்களுக்கான பாதுகாப்பு, காவல் துறையில் புதிய மாற்றங்கள், ஒழுங்கு முறை தவறும் அலுவலர்களின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை, அம்மா உணவகம், அம்மா மருந்தகம் எனப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகிறார். இதன் காரணமாகவே ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசிபெற 450 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டுள்ளேன்” என்றார்.
அவரிடத்தில் முதலமைச்சரைச் சந்தித்து ஆசிபெற மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகச் சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக போல் திமுக அரசும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்- ஜெயக்குமார்