திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் (ஜன.3) கழிவுநீர் ஊர்தி ஓட்டுநர் ராஜசேகர் என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது.
அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் மீஞ்சூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜசேகரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜசேகர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. வெட்டுக் காயம் பலமாக ஏற்பட்டதால், ராஜசேகர் நேற்று (ஜன.4) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முன்விரோதம் காரணமாக, கழிவுநீர் ஊர்தி ஓட்டுநரைக் கொலை செய்த தேவராஜ் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான ராஜசேகர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி, அவரது உடலைக் கொண்டு வந்த அமரர் ஊர்தியினை மடக்கிப் பிடித்து உறவினர்கள் மற்றும் அரியன்வாயல், மீஞ்சூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலில் மீஞ்சூரில் புழக்கத்தில் இருக்கும் கஞ்சா பயன்பாட்டினை தடுத்து நிறுத்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. மீஞ்சூர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க:கழிவுநீர் ஊர்தி ஓட்டுநர் கொலை செய்த கும்பல் கைது!