திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் மாவட்டத்தில் வசித்துவரும் திருநங்கைகளுக்கு கரோனா தடுப்பு ஊசி போடும் முகாம், பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்-சிஎஸ்ஏ தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி மளிகைப் பொருள்கள், போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர், திருவள்ளூர் தொகுதி எம்பி ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்து நிவாரணப் பொருள்களை வழங்கினர்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்ற நாளிலிருந்து ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் உழைத்து இன்று கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை தடுப்பூசி பற்றாக்குறை என இருந்த நிலைமையை மாற்றி இன்றைக்கு அனைத்து மருத்துவமனைகளும் முழு அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தாலும் இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் கடல் கடந்து பல நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் உதவி செய்துவருகிறார் மு.க. ஸ்டாலின்” என்றார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் தனியார் சார்பில் முன்களப்பணியாளர்கள் 500 பேருக்கு அரிசி மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
பின்னர் அங்கு பேசிய அவர், ”இன்று முன்களப் பணியாளர்களாக உள்ள தூய்மைப் பணியாளர்களின் பணி மகத்தானது. அவர்களது ஒத்துழைப்பு முழுமையான அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் இன்று கரோனாவை ஒழித்திருக்க முடியாது. ஆகையால் அவர்களது பாதம் தொட்டு வணங்குகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகளுக்கு தொலைபேசி வழி ஆலோசனை மையம் தொடக்கம்